Wednesday, 15 February 2017

2 இன் 1 பூரி

Need:
  • பீட்ரூட் - 100 கிராம்
  • பசலைக்கீரை - ஒரு கட்டு
  • கோதுமை மாவு - அரைக் கிலோ
  • உப்பு - ஒரு தேக்கரண்டி
  • எண்ணெய் - தேவையான அளவு
Process:
கோதுமை மாவை சலித்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். பசலைக்கீரையை தனித்தனி இலைகளாக ஆய்ந்து அலசி வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதிக்கும் தண்ணீரில் அலசிய பசலைக்கீரையை போடவும். போட்ட உடனே அடுப்பை நிறுத்தி விடவும். அதிக நேரம் கொதிக்க விட வேண்டாம்.

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

பீட்ரூட்டை தோல் சீவி குக்கரில் வைத்து வேக வைத்து எடுக்கவும். பிறகு பீட்ரூட்டை துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் வைத்துக் கொள்ளவும்.

இதேப் போல் வேக வைத்த பசலைக்கீரையை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

முதலில் கால் கிலோ கோதுமை மாவுடன் அரைத்த பீட்ரூட் விழுதை சேர்த்து பிசைந்து கொள்ளவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை. எண்ணெயை கையில் தொட்டு கொண்டு சப்பாத்தி மாவுப்பதத்தில் பிசையவும்.

இதைப் போல் மற்றொரு கால் கிலோ கோதுமை மாவுடன் பசலைக்கீரை விழுதை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசையவும். கால் கப் தண்ணீரை தெளித்து விட்டு பிசைந்துக் கொள்ளவும். பிசைந்த இரண்டு மாவையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பிசைந்த மாவு இரண்டிலும் ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டையாக எடுக்கவும். இரண்டையும் சேர்த்து வைத்து அதை சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்க்கவும்.

சற்று பெரியதாக தேய்த்து விட்டு ஒரு வட்டமான தட்டை வைத்து வெட்டி ஓரத்தில் உள்ள மீதமுள்ள மாவை எடுத்து விடவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேய்த்து வைத்திருக்கும் பூரியை போட்டு அதன் மேல் கரண்டியால் எண்ணெய் ஊற்றவும்.

பூரி நன்கு உப்பி வந்ததும் அரிக்கரண்டியால் எடுக்கவும்.

சுவையான கலர்புல்லான டூ இன் ஒன் பூரி தயார்.
 

No comments:

Post a Comment