Friday, 17 February 2017

சின்ன உருளைக்கிழங்கு டிலைட்

Need:
  • சின்ன உருளைக்கிழங்கு - 10
  • எண்ணெய் - 4 தேக்கரண்டி
  • சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • பச்சை மிளகாய், இஞ்சி அரைத்த விழுது - அரை தேக்கரண்டி
  • புதினா இலைகள் - ஒரு கைப்பிடி
  • தயிர் - 6 மேசைக்கரண்டி
  • சின்ன வெங்காயம் - 10
  • மிளகாய்தூள் - அரை தேக்கரண்டி
  • பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
Process:
தேவையானப் பொருள்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

சின்ன உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை தனித்தனியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பாதி சீரகத்தை போட்டு வெடித்ததும் வேக வைத்துத் தோல் உரித்த உருளைக்கிழங்கை சேர்த்து பிரட்டி விடவும்.

அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி விழுது, நறுக்கி வைத்த புதினா இலைகள் சேர்த்து வதக்கவும்.

அதில் 3 தேக்கரண்டி தயிர் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

உருளைக்கிழங்கு நன்கு சேர்ந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து 3 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் மீதி சீரகம் போட்டு வெடித்ததும் சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.

அதனுடன் மிளகாய்த் தூள், பூண்டு விழுது, மீதியுள்ள தயிர், சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.

எல்லாம் சேர்ந்து நன்கு மசாலாப் போல் வந்ததும் அதில் உருளைக்கிழங்கு கலவையைப்போட்டு அடுப்பை சிம்மில் வைத்து வதக்கவும்.

உருளைக்கிழங்குடன் மசாலா சேர்ந்து பிரட்டினாற்போல் வந்ததும் இறக்கி வைத்து கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

சுவையான சின்ன உருளைக்கிழங்கு டிலைட் ரெடி.

மட்டன் ட்ரை ஃப்ரை

Need:
  • மட்டன் - 350 கிராம்
  • வெங்காயம் - 2
  • இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  • மிளகாய்தூள் - 1 1/2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • தயிர் - 100 மில்லி
  • சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • சோம்பு - ஒரு தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2
Process:
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசாலா பொருட்கள் மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்கவும். அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

அதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் மட்டன் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

மட்டன் வதங்கியதும் தயிர் மற்றும் சீரகம் சேர்த்து பிரட்டி விடவும்.

மட்டன் வேக அதில் இருக்கும் தண்ணீரே போதுமானது, தேவையெனில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி சிம்மில் வைத்து வேக விடவும்.

மட்டன் வெந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

சுவையான மட்டன் ட்ரை ஃப்ரை தயார்.

பச்சைமிளகாய் சாம்பார்

Need:
  • துவரம் பருப்பு - கால் கப்

  • மிளகாய் வற்றல் - 3

  • கடுகு - அரை தேக்கரண்டி

  • புளிக்கரைச்சல் - 3 மேசைக்கரண்டி

  • பச்சை மிளகாய் - 8

  • கறிவேப்பிலை - ஒரு கொத்து

  • தேங்காய் துருவல் - கால் கப்

  • வெண்டைக்காய் - 7

  • கத்திரிக்காய் - 1

  • மாங்காய் - பாதி

  • பெருங்காயத் தூள் - அரை தேக்கரண்டி

  • கொத்தமல்லி - 2 கொத்து

  • வெங்காயம் - 3

  • தக்காளி - 2

  • உப்பு - 2 தேக்கரண்டி

  • எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
Process:
வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெண்டைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மாங்காயை துண்டுகளாக நறுக்கவும். கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தேங்காய், பச்சை மிளகாய் இரண்டையும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

குக்கரில் பருப்பு, வெங்காயம், தக்காளி, போட்டு தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி வெண்டைக்காயை வதக்கி வைத்துக் கொள்ளவும்.

வேக வைத்த பருப்புடன் வதக்கிய வெண்டைக்காய், மாங்காய், கத்திரிக்காய், போட்டு புளிக்கரைச்சல் ஊற்றி, உப்பு போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.

கொதித்ததும் அரைத்த விழுதை போட்டு கிளறி விட்டு 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் போட்டு தாளிக்கவும்.

தாளித்தவற்றை சாம்பாருடன் சேர்த்து சேர்த்து கலக்கி விட்டு இறக்கவும்.

சுவையான பச்சைமிளகாய் சாம்பார் தயார்.

கோபி மஞ்சூரியன்

Need:
  • காலிப்ளவர் சிறியது - ஒன்று
  • மைதா மாவு - ஒரு மேசைக்கரண்டி
  • கார்ன்ப்ளார் - அரை மேசைக்கரண்டி
  • தனி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
  • உப்பு - ஒரு சிட்டிகை + ஒரு தேக்கரண்டி
  • குடை மிளகாய் - ஒன்று
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
  • தக்காளி சாஸ் - 3 மேசைக்கரண்டி
  • வெங்காயம் - 2
  • மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
  • பூண்டு - 8 பல்
 Process:
பூண்டை சிறுசிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காலிஃப்ளவரை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு தட்டில் காலிஃப்ளவர் துண்டுகளை போட்டு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சுடு தண்ணீரை ஊற்றி 5 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் எடுத்து தண்ணீரை வடிகட்டி விட்டு அதனுடன் மைதாமாவு, கார்ன்ஃப்ளார், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு பிசைந்துக் கொள்ளவும். அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசறி 10 நிமிடம் ஊற வைக்கவும்.

வாணலியில் 1 1/2 கப் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ஊற வைத்த காலிஃப்ளவர் துண்டுகளை போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு போட்டு நிறம் மாறும் வரை வதக்கவும்.

நிறம் மாறியதும் அதில் வெங்காயம், குடைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு வதக்கி விட்டு அதில் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டிவிட்டு வதக்கவும்.

இஞ்சி பூண்டு வாசனை அடங்கி, குடைமிளகாய் மற்றும் வெங்காயம் வதங்கியதும் தக்காளிசாஸ் ஊற்றி சாம்பார் மிளகாய் தூள் போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி கிளறி விடவும்.

5 நிமிடம் கழித்து பொரித்து வைத்திருக்கும் காலிஃப்ளவரை போட்டு நன்கு கிளறி விடவும்.

பிறகு 3 அல்லது 5 நிமிடம் கழித்து இறக்கி வைத்து விடவும்.

சுவையான கோபி மஞ்சூரியன் தயார். பரிமாறும் பொழுது மேலே கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

கொத்தமல்லி பொடி

Need:
  • தனியா - 100 கிராம்
  • துவரம் பருப்பு - 50 கிராம்
  • புளி - கொட்டை பாக்கு அளவு
  • உப்பு - அரை தேக்கரண்டி
  • மிளகாய் வற்றல் - 8
  • பெருங்காயத் துண்டு - சுண்டைக்காய் அளவு
Process:
தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பெருங்காயம் போட்டு பொரித்து, துவரம் பருப்பு போட்டு 2 நிமிடம் வறுக்கவும்.

அதன் பிறகு மிளகாய் வற்றல் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி தனியா போட்டு 3 நிமிடம் வாசனை வரும் வரை வறுக்கவும்.

ஆறியதும் மிக்ஸியில் முதலில் துவரம் பருப்பு, மிளகாய் வற்றல், உப்பு போட்டு பொடி செய்யவும்.

அதனுடன் வறுத்து வைத்துள்ள தனியா மற்றும் புளி சேர்த்து பொடி செய்யவும்.

சாதத்துடன் நெய் சேர்த்து இந்த பொடியை கலந்து சாப்பிடலாம், சுவையாக இருக்கும்.

தேங்காய் துவையல்

Need:
  • கருப்பு உளுத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
  • தேங்காய் - ஒரு மூடி
  • மிளகாய் வற்றல் - 5
  • புளி - கொட்டை பாக்கு அளவு
  • உப்பு - அரை தேக்கரண்டி
  • எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
  • பெருங்காயத் துண்டு - சுண்டைக்காய் அளவு
 Process:
தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயத் துண்டை போட்டு பொரித்து எடுக்கவும். அதில் மிளகாய் வற்றல் போட்டு வறுத்து எடுக்கவும்.

உளுத்தம் பருப்பை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் புளி, மிளகாய் வற்றல், உப்பு, வறுத்த பெருங்காயத் துண்டு, தேங்காய் துருவல் போட்டு 3 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.

கடைசியில் உளுத்தம் பருப்பை வைத்து ஒரு முறை அரைத்து விட்டு எடுத்து விடவும்.

சுவையான தேங்காய் துவையல் ரெடி. இந்த துவையலை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

ஜவ்வரிசி உப்புமா

Need:
  • நைலான் ஜவ்வரிசி - ஒரு கப்
  • பயத்தம் பருப்பு - கால் கப்
  • மிளகாய் வற்றல் - 4
  • கடுகு - ஒரு தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
  • கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
  • தேங்காய் துருவல் - கால் கப்
  • கல் உப்பு - ஒரு தேக்கரண்டி
  • பெருங்காயம் - ஒரு சிறு குண்டு மணி அளவு
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
 Process:
தேங்காயை துருவிக் கொள்ளவும். மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி வைத்துக் கொள்ளவும். கறிவேப்பிலையை தண்ணீரில் அலசிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசி போட்டு தண்ணீர் ஊற்றி 3 மணிநேரம் ஊற வைக்கவும். ஜவ்வரிசி ஊறியதும் தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்

மற்றொரு பாத்திரத்தில் பயத்தம் பருப்பை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் பயத்தம் பருப்பை களைந்து தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்.

அடிகனமான வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயத் துண்டை போட்டு பொரிக்கவும். நன்கு சிவந்து பொரிந்ததும் எடுத்து பொடி செய்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் கடலைப்பருப்பு மற்றும் மிளகாய் வற்றல் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். சற்று சிவக்க வறுக்கவும்.

பிறகு கறிவேப்பிலை, தண்ணீர் வடித்து வைத்திருக்கும் ஜவ்வரிசியை போடவும். பருப்பையும் ஜவ்வரிசியுடன் சேர்க்கவும்.

பிறகு பொடித்து வைத்திருக்கும் பெருங்காயத் தூளை போட்டு ஜவ்வரிசி மற்றும் பயத்தம் பருப்பு ஒன்றாக சேரும்படி நன்கு கிளறவும்.

பின்னர் மூடி வைத்து விட்டு இடையில் திறந்து கிளறி கொண்டே இருக்கவும்.

5 நிமிடம் கழித்து மூடியை திறந்து ஒரு முறை கிளறி விட்டு தேங்காய் துருவலை போட்டு கிளறவும். அடிபிடித்து விடாமல் கிளறி கொண்டே இருக்கவும்.

அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு வேக வைக்கவும். இடையில் கிளறி கொண்டே இருக்கவும். உப்புமா பொலபொலவென்று வந்ததும் அடுப்பில் இருந்து எடுத்து விடவும்.

சூடான ஜவ்வரிசி உப்புமா தயார். இந்த உப்புமாவில் பெரிய ஜவ்வரிசி வைத்து செய்தால் நன்றாக இருக்காது. நைலான் ஜவ்வரிசி வைத்து செய்தால் ருசியாக இருக்கும்.

சாக்லேட் & நட்ஸ் சாண்ட்விச்

Need:
  • ப்ரெட்
  • நியூட்டெல்லா
  • வெண்ணெய்
  • பாதாம், முந்திரி, பிஸ்தா (பொடியாக நறுக்கியது)
 Process:
ப்ரெட் துண்டில் ஒரு பக்கம் மட்டும் வெண்ணெய் தடவி வைக்கவும்.

மற்றொரு பக்கத்தில் நியூட்டெல்லாவை தடவவும்.

அதன் மேல் பொடியாக நறுக்கிய நட்ஸ் தூவவும்.

மற்றொரு ப்ரெட் துண்டில் ஒரு பக்கம் வெண்ணெய் தடவி சாக்லேட் தடவி வைத்துள்ள ப்ரெட்டில் மூடி டோஸ்டரில் வைக்கவும்.

ப்ரெட் டோஸ்டாகி சிவந்ததும் எடுக்கவும்.

சாக்லேட் & நட்ஸ் சாண்ட்விச் தயார்.

சிக்கன் தேங்காய்ப்பால் கிரேவி

Need:
  • சிக்கன் - ஒரு கிலோ
  • முழு தேங்காய் ( சிறியது) - ஒன்று
  • பெரிய வெங்காயம் - 2 (பெரியது)
  • தக்காளி - 2 (பெரியது)
  • இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
  • மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி
  • கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
  • சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
  • மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
  • சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
  • கலர் பவுடர் - கால் தேக்கரண்டி
  • எண்ணெய் - 3 தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கேற்ப
 Process:
வெங்காயம், தக்காளியை தனித் தனியாக மிக்ஸியில் அரைத்து வைக்கவும். அனைத்து பொடி வகைகளுடன் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். தேங்காயை அரைத்து 2 கப் பால் எடுத்து வைக்கவும்.

சிக்கனை கழுவி சுத்தம் செய்து பொடி வகைகளை சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் ஊற விடவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி தக்காளி விழுதை சேர்க்கவும்.

தக்காளி வதங்கியதும் பிசறி வைத்துள்ள சிக்கனை சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் வேக விடவும். சிக்கனில் இருக்கும் தண்ணீரே போதும் வேண்டுமெனில் சிறிது சேர்க்கலாம்.

சிக்கன் தண்ணீர் வற்றியதும் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட்டு, கிரேவி பதம் வந்ததும் மல்லி தழை சேர்த்து இறக்கவும்.

சுவையான சிக்கன் தேங்காய் பால் கிரேவி ரெடி. இது சாதம், சப்பாத்தி என எல்லாவற்றிற்கும் பொருத்தமாக இருக்கும்.

புளியோதரை

Need:
  • மிளகாய் வற்றல் - 25
  • அரிசி - அரை படி
  • வேர்க்கடலை - அரை கப்
  • வெள்ளை உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
  • கடுகு - ஒரு தேக்கரண்டி
  • பெருங்காயம் - அர நெல்லிக்காய் அளவு
  • கடலை பருப்பு - ஒரு மேசைக்கரண்டி+ஒரு தேக்கரண்டி
  • புளி - ஆரஞ்சு பழ அளவு
  • கல் உப்பு - ஒன்றரை மேசைக்கரண்டி
  • கறிவேப்பிலை - 2 கொத்து
  • வெந்தயம் - அரை மேசைக்கரண்டி
  • எண்ணெய் - 100 மில்லி
  • மஞ்சள் தூள் - ஒரு தேக்கராண்டி
  • சீனி - 3 தேக்கரண்டி
 Process:
வேர்க்கடலையை தோல் நீக்கி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி புளியை போட்டு அதனுடன் உப்பு போட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும். புளியுடன் தண்ணீர் ஊற்றி கரைத்து 3 1/2 கப் புளித் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்.

வெறும் வாணலியில் வெந்தயத்தை போட்டு மிதமான தீயில் வைத்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயத்தை பிய்த்து போட்டு பொரித்து எடுக்கவும். பிறகு மிளகாயை போட்டு தீயை குறைந்து வைத்து வதக்கவும்.

அதில் கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு ஒரு முறை கிளறி விட்டு புளித் தண்ணீரை ஊற்றி மஞ்சள் தூள், சீனி போட்டு கொதிக்க விடவும். புளித் தண்ணீரை ஊற்றியதும் தீயை அதிகமாக வைத்து செய்யவும்.

பெருங்காயத்தையும் வெந்தயத்தையும் பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.

15 நிமிடம் கொதித்ததும் கிளறி விடவும். 8 நிமிடம் கழித்து பெருங்காயப் பொடி, வெந்தயப் பொடி போட்டு கிளறி கொண்டே இருக்கவும்.

ஆறியதும் எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ளவும். கைப்படாமல் இருந்தால் 6 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.

சாதத்தை பொலபொலவென்று வடித்து 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, எண்ணெய் ஊற்றுவதால் சாதம் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும் அதன் மேல் வேர்க்கடலை மற்றும் கறிவேப்பிலை போட்டு அதில் தேவையான அளவு புளிக்காய்ச்சல் போட்டு நன்கு கலந்து விடவும்.

சுவையான புளியோதரை தயார்.

Wednesday, 15 February 2017

பீன்ஸ் கேரட் பருப்புக் கறி

Need:
  • பீன்ஸ் - கால் கிலோ
  • கேரட் - ஒன்று
  • துவரம் பருப்பு - ஒரு கைப்பிடி அளவு
  • வெங்காயம் - ஒன்று
  • தக்காளி - ஒன்று
  • காய்ந்த மிளகாய் - ஒன்று
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி
  • கடுகு, உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
  • சீரகம் - அரை தேக்கரண்டி
  • மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
  • சாம்பார் பொடி - ஒன்றரை தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கேற்ப
Process:
பீன்ஸுடன் உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். துவரம் பருப்பை மலர்ந்த பதத்தில் வேக வைக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும். வேக வைத்த பருப்பில் உள்ள தண்ணீரைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.

தாளித்தவற்றுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி குழைந்ததும் சாம்பார் பொடி, மஞ்சள் பொடி சேர்த்துப் பிரட்டவும்.

அதனுடன் வேக வைத்த பீன்ஸ் மற்றும் கேரட்டைச் சேர்த்து, பருப்பு தண்ணீரை ஊற்றி, சிறிது உப்பு போட்டு கொதிக்கவிடவும்.

காய்களுடன் உப்பு, காரம் சேர்ந்ததும் வேக வைத்த பருப்பைச் சேர்த்து சிறிது நேரம் பிரட்டிவிடவும்.

காய்கள் பருப்புடன் சேர்ந்து கெட்டியாகி கூட்டு பதம் வந்ததும் இறக்கவும்.

பக்க உணவாகப் பரிமாற, சுவையான பீன்ஸ் கேரட் பருப்புக் கறி தயார்.

மொரோக்கன் லேம்ப் சாப்ஸ்

Need:
  • மட்டன் சாப்ஸ் - 1/2 கிலோ
  • இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
  • பேப்ரிக்கா பவுடர் - ஒரு தேக்கரண்டி
  • சீரகத் தூள் - முக்கால் தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  • புதினா - 5 இலைகள்
  • பார்ஸ்லி - 10 இலைகள்
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  • உப்பு - தேவைக்கேற்ப
Process:
முதலில் மட்டன் சாப்ஸைக் கழுவி எடுத்துக் கொள்ளவும்.

அத்துடன் தூள் வகைகள், பொடியாக நறுக்கிய புதினா, பார்ஸ்லி இலைகள், இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

அதனை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊறவிடவும்.

பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி, குறைந்த தீயில் வைத்து சாப்ஸைப் பொரித்து எடுக்கவும்.

சுவையான மொரோக்கன் லேம்ப் சாப்ஸ் தயார். பார்ஸ்லி இலை தூவி அலங்கரித்துப் பரிமாறவும். இதை பார்ட்டிகளில் ஸ்டாட்டராக பரிமாறலாம்.

குதிரைவாலி தேங்காய்ப்பால் புலாவ்

Need:
  • குதிரைவாலி - ஒரு கப்
  • வெங்காயம் - ஒன்று
  • தக்காளி - 2 (சிறியது)
  • இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் விழுது - 3 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
  • கரம் மசாலா - அரை தேக்கரண்டி
  • தேங்காய்ப்பால் - ஒரு கப்
  • கிராம்பு, ஏலக்காய், பட்டை - தலா 2
Process:
குக்கரில் எண்ணெய் விட்டு கிராம்பு, ஏலக்காய், பட்டை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அதனுடன் தக்காளியை அரைத்து சேர்த்து வதக்கி விடவும். அதில் மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.

தேங்காய்ப்பால் மற்றும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் ஊற வைத்த குதிரைவாலி அரிசியை சேர்க்கவும்.

குக்கரின் மூடியை வைத்து மூடாமல் தட்டை வைத்து மூடி, 10 முதல் 15 நிமிடங்கள் சிம்மில் வேக விடவும்.

வெந்ததும் திறந்து ஒரு முறை கிளறி இறக்கவும். தேவையெனில் முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்கலாம்.

சுவையான குதிரைவாலி தக்காளி தேங்காய்ப்பால் புலாவ் தயார்.

கார சட்னி

Need:
  • தக்காளி - 10
  • காய்ந்த மிளகாய் - 5
  • பூண்டு - 5 பல்
  • நல்லெண்ணெய் - 2 குழிக்கரண்டி
  • கடுகு, உளுந்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • உப்பு - தேவைக்கேற்ப
 Process:
முதலில் தேவையானவற்றை அனைத்தையும் தயார்படுத்தி வைக்கவும்.

தக்காளி, பூண்டு, மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

அகலமான வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு வெடித்ததும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

தண்ணீர் வற்றி எண்ணெய் மேலாக வரும் வரை கொதிக்க விடவும்.

எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கினால் சுவையான கார சட்னி ரெடி. இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

பால் கொழுக்கட்டை

Need:
  • அரிசி - ஒரு கப்
  • வெல்லம் - 300 கிராம்
  • தேங்காய் துருவல் - ஒரு கப்
  • கல் உப்பு - அரை தேக்கரண்டி
  • தண்ணீர் - 5 கப்
Process:
வெல்லத்தை பொடியாக நசுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊற வைத்த அரிசியை தண்ணீர் வடித்து விட்டு கிரைண்டரில் போட்டு அதனுடன் தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும். கெட்டியாகவும் நைசாக அரைக்கவும். கிரைண்டரை கழுவி அரை கப் அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை போட்டு கரைய விடவும். வெல்லம் கரைந்ததும் எடுத்து மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும்.

அதை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கொதித்ததும் அதில் அரைத்து வைத்திருக்கும் மாவை முறுக்கு பிழியும் அச்சியில் மூன்று கண் உள்ள அச்சியில் உரல் கொள்ளும் அளவு மாவை வைத்து அதை வெல்ல பாகில் சுற்றிலும் பிழிந்து விடவும். அதை போல எல்லா மாவையும் பிழிந்து விடவும்.

கிரைண்டரை கழுவி எடுத்த தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். கொதித்து பொங்கி வரும் போது சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கி விடவும்.

மாவை பிழிந்தவுடன் கரண்டியை வைத்து கிளறக் கூடாது. ஆனால் சிம்மில் வைத்த பின்னர் ஒரு முறை மெதுவாக கிளறி விடவும். 10 நிமிடம் கழித்து திக்கானதும் இறக்கி விடவும். விருப்பப்பட்டால் வாசனைக்கு ஏலக்காயை பொடி செய்து சேர்த்துக் கொள்ளலாம்.

சுவையான பால் கொழுக்கட்டை தயார்.

கத்தரி உருளை மண்டி

Need:
  • கத்தரிக்காய் - 6
  • உருளைக்கிழங்கு - ஒன்று
  • சின்ன வெங்காயம் - 15
  • பச்சை மிளகாய் - 4
  • தக்காளி (சிறியது) - ஒன்று
  • புளி - நெல்லிக்காய் அளவு
  • அரிசி களைந்த நீர் - ஒரு கப்
  • மிளகாய் பொடி - அரை தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
  • கடுகு - அரை தேக்கரண்டி
  • வெந்தயம் - அரை தேக்கரண்டி
 Process:
கத்தரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.. சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கி வைக்கவும். அரிசி களைந்த நீரில் புளியை ஊற வைத்துக் கரைத்து எடுத்துக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.

அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கிவிட்டு, மிளகாய் பொடி சேர்க்கவும்.

பிறகு நறுக்கிய காய்களைச் சேர்த்து உப்பு போட்டு வதக்கவும்.

அத்துடன் புளி தண்ணீரை ஊற்றி, குக்கரை மூடி ஒரு விசில் வரவிடவும்.

ப்ரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து சற்று கெட்டியாகும் வரை 3 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

மதுரை ஸ்பெஷல் கத்தரி உருளை மண்டி தயார். இது எலுமிச்சை சாதம், புளியோதரை என அனைத்துடனும் சாப்பிடப் பொருத்தமாக இருக்கும். பயணத்திற்கு ஏற்ற பக்க உணவு இது.

காரட் கீர்

Need:
  • காரட் - 3
  • பாதாம் பவுடர் - 1 1/2 மேசைக்கரண்டி
  • பால் - அரை கப்
  • பாதாம் பருப்பு - 8
  • சீனி - கால் கப் + 2 மேசைக்கரண்டி
  • உப்பு - ஒரு சிட்டிகை
Process:
காரட்டை துருவி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் ஊற்றி துருவிய காரட்டை போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.

வெந்ததும் எடுத்து தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு ஒரு முறை அரைத்துக் கொள்ளவும்.

அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு சீனி, பாதாம் பவுடர், பாதாம் பருப்பு, உப்பு, பால் ஆகியவற்றை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

இதை அப்படியே குடித்தால் மேலே ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து குடிக்கவும், அல்லது ப்ரிட்ஜில் வைத்து நன்கு குளிர்ச்சியாக குடிப்பதாக இருந்தால் நெய் தேவையில்லை.

தனியாக துருவி வேக வைக்காமல் குக்கரிலேயே அப்படியே வேக வைத்து எடுத்து பிசைந்து விட்டுக் கொண்டு மற்ற பொருட்களையும் சேர்க்கலாம். சுவையான காரட் கீர் தயார்.

மதுரை கறி தோசை

Need:
  • மட்டன் கொத்து கறி - 200 கிராம்
  • தோசை மாவு - ஒரு கப்
  • வெங்காயம் - ஒன்று
  • தக்காளி - ஒன்று
  • முட்டை - 3
  • இஞ்சி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
  • மல்லி தூள் - 3/4 தேக்கரண்டி
  • கரம் மசாலா - அரை தேக்கரண்டி
  • மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  • சீரகதூள் - அரை தேக்கரண்டி
  • எண்ணெய் - 3 தேக்கரண்டி
  • கடுகு,- அரை தேக்கரண்டி
  • சோம்பு - அரை தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கேற்ப
Process:
கறியுடன் கால் தேக்கரண்டி மிளகாய் தூள், உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைத்து கொள்ளவும். கறி நன்றாக பஞ்சாக வெந்திருக்க வேண்டும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முட்டையை அடித்து வைக்கவும் (உப்பு தேவையில்லை). வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு தாளிக்கவும்.

அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி விட்டு தக்காளி சேர்த்து குழைந்ததும் மிளகு தூள் தவிர மற்ற தூள் வகைகளை சேர்த்து பிரட்டி விடவும்.

அதனுடன் வேக வைத்த கறியை தண்ணீரோடு சேர்த்து கொதிக்க விட்டு கெட்டியாக கூட்டு பதம் வந்ததும் இறக்கவும் (நீர்க்க இருக்க கூடாது).

அடுப்பை சிம்மில் வைத்து தோசைக்கல்லில் மாவை எடுத்து சிறிய ஊத்தப்பமாக ஊற்றவும். அது லேசாக வெந்ததும் ஒரு கரண்டி முட்டை ஊற்றவும்.

அதன் மேல் ஒரு கரண்டி கறியை வைத்து பரப்பி விடவும். பிறகு மேல் கால் தேக்கரண்டி மிளகு தூள் தூவிவிட்டு சுற்றி எண்ணெய் விட்டு திருப்பி போட்டு தோசையை அழுத்தி விடவும்.

ஒரு நிமிடம் விட்டு எடுத்தால் சுவையான மதுரை கறி தோசை தயார். இதற்கு தொட்டு கொள்ள எதுவும் தேவையில்லை. காரசாரமாக அப்படியே சாப்பிடலாம்.

2 இன் 1 பூரி

Need:
  • பீட்ரூட் - 100 கிராம்
  • பசலைக்கீரை - ஒரு கட்டு
  • கோதுமை மாவு - அரைக் கிலோ
  • உப்பு - ஒரு தேக்கரண்டி
  • எண்ணெய் - தேவையான அளவு
Process:
கோதுமை மாவை சலித்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். பசலைக்கீரையை தனித்தனி இலைகளாக ஆய்ந்து அலசி வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதிக்கும் தண்ணீரில் அலசிய பசலைக்கீரையை போடவும். போட்ட உடனே அடுப்பை நிறுத்தி விடவும். அதிக நேரம் கொதிக்க விட வேண்டாம்.

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

பீட்ரூட்டை தோல் சீவி குக்கரில் வைத்து வேக வைத்து எடுக்கவும். பிறகு பீட்ரூட்டை துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் வைத்துக் கொள்ளவும்.

இதேப் போல் வேக வைத்த பசலைக்கீரையை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

முதலில் கால் கிலோ கோதுமை மாவுடன் அரைத்த பீட்ரூட் விழுதை சேர்த்து பிசைந்து கொள்ளவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை. எண்ணெயை கையில் தொட்டு கொண்டு சப்பாத்தி மாவுப்பதத்தில் பிசையவும்.

இதைப் போல் மற்றொரு கால் கிலோ கோதுமை மாவுடன் பசலைக்கீரை விழுதை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசையவும். கால் கப் தண்ணீரை தெளித்து விட்டு பிசைந்துக் கொள்ளவும். பிசைந்த இரண்டு மாவையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பிசைந்த மாவு இரண்டிலும் ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டையாக எடுக்கவும். இரண்டையும் சேர்த்து வைத்து அதை சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்க்கவும்.

சற்று பெரியதாக தேய்த்து விட்டு ஒரு வட்டமான தட்டை வைத்து வெட்டி ஓரத்தில் உள்ள மீதமுள்ள மாவை எடுத்து விடவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேய்த்து வைத்திருக்கும் பூரியை போட்டு அதன் மேல் கரண்டியால் எண்ணெய் ஊற்றவும்.

பூரி நன்கு உப்பி வந்ததும் அரிக்கரண்டியால் எடுக்கவும்.

சுவையான கலர்புல்லான டூ இன் ஒன் பூரி தயார்.
 

தந்தூரி சிக்கன் பிரியாணி

Need:
  • சிக்கனுடன் சேர்த்து ஊற வைக்க :
  • தயிர் - ஒரு கப்
  • பூண்டு - ஒன்று
  • இஞ்சி - ஒரு துண்டு
  • கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
  • கறிவேப்பிலை - சிறிது
  • பச்சைமிளகாய் - 2
  • லவங்கம் - 4
  • எலுமிச்சை - பாதி
  • மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
  • கரம் மசாலா - அரை தேக்கரண்டி
  • மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
  • சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
  • கஸூரி மேத்தி - ஒரு தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • பிரியாணி செய்ய :
  • அரிசி - அரை கிலோ
  • சிக்கன் லெக்பீஸ் - 4
  • வெங்காயம் - 3
  • தக்காளி - 3
  • இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
  • கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
  • புதினா, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
  • தாளிக்க :
  • பட்டை, பிரிஞ்சு இலை, இலவங்கம், ஏலக்காய், அன்னாசிப்பூ - தலா2
Process:
சிக்கனுடன் சேர்த்து ஊற வைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்து சுத்தம் செய்த சிக்கனில் சேர்த்து 3 மணிநேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த சிக்கனை சிறிது எண்ணெய் விட்டு முக் பாகம் வேகும் வரை பொரிக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும்.

அதில் இஞ்சி பூண்டு விழுது, தூள் வகைகள், உப்பு சேர்த்து வதக்கி பொரித்த சிக்கனை சேர்க்கவும்.

அதனுடன் ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கொதித்தது ஊற வைத்த அரிசியை சேர்த்து கலந்து, எலுமிச்சை சாறு ஊற்றி வேக விடவும்.

விருப்பமெனில் கலர் சேர்த்து 10 முதல் 15 நிமிடம் தம்மில் போடவும்.

அரைமணி நேரம் கழித்து திறக்க சுவையான தந்தூரி சிக்கன் பிரியாணி தயார்.

Tuesday, 14 February 2017

தேங்காய்ப்பால் மீன் குழம்பு

Need:
  • மீன் - அரை கிலோ
  • வெங்காயம் - 2
  • தக்காளி - 3
  • தேங்காய் பால் - 2 கப்
  • குழம்பு பொடி - 4 தேக்கரண்டி
  • நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
  • கடுகு - அரை தேக்கரண்டி
  • வெந்தயம் - அரை தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் - 4
  • பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
  • புளி தண்ணீர் - 2 கப்
  • உப்பு - தேவைக்கேற்ப
Process:
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம் தாளிக்கவும்.

அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி விட்டு தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி வதங்கியதும், பூண்டு விழுது சேர்த்து வதக்கி, குழம்பு பொடி சேர்க்கவும்.

குழம்பு பொடி சேர்த்து பிரட்டியவுடன் புளித்தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.

குழம்பு கொதித்ததும் மீன் சேர்த்து வேக விடவும். மீன் பாதி வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும். எண்ணெய் மேலே தெளிந்தவுடன் இறக்கவும்.

சுவையான தேங்காய் பால் மீன் குழம்பு தயார்.

மொச்சை சிப்ஸ்

Need:
  • பிஞ்சு மொச்சை - முக்கால் கப்
  • மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
  • உப்பு - அரை தேக்கரண்டி
  • பெருங்காயம் - சிறு குண்டு மணி அளவு
  • எண்ணெய் - அரை கப்
Process:
முதலில் மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயம் போட்டு பொரித்து எடுத்து பொடி செய்துக் கொள்ளவும். பிறகு மொச்சையை போட்டு மொறுவலாக பொரித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

அதில் மிளகாய் தூள், உப்பு, பெருங்காயத் தூள் போட்டு குலுக்கவும். பொரித்தவுடனே மிளகாய் தூள் சேர்க்கவும். அப்போதுதான் மொச்சையில் மிளகாய் தூள் சேரும்.

சுவையான மொருமொரு மொச்சை சிப்ஸ் ரெடி.

கடலைப்பருப்பு பணியாரம்

Need:
  • அதிகம் புளிப்பில்லாத மாவு - ஒரு கப்
  • கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
  • வெங்காயம் - ஒன்று
  • கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
  • எண்ணெய் - தேவைக்கேற்ப
  • உப்பு - தேவைக்கேற்ப
Process:
வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடலைப்பருப்பை 10 நிமிடம் ஊற வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் கறிவேப்பிலையை வதக்கி இறக்கவும். அதில் சிறிது உப்பு சேர்த்து கொள்ளவும்.

மாவில் ஊற வைத்த கடலை பருப்பு, வதக்கிய வெங்காயம் சேர்த்து உப்பு சரிபார்த்து கலக்கி கொள்ளவும்.

பணியார சட்டியை அடுப்பில் வைத்து மாவை ஒரு டம்ளரில் ஊற்றி கொள்ளவும்.

சட்டியில் எண்ணெய் விட்டு டம்ளரில் இருக்கும் மாவை பணயாரங்களாக குழியில் முக்கால் குழி வரை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு மூடி வேக விடவும்.

பாதி வெந்ததும் திருப்பி போட்டு சிறிது சிவக்க வேக விட்டு எடுக்கவும்..

சுவையான கடலைப்பருப்பு பணியாரம் தயார். கார சட்னியுடன் பரிமாறலாம்.

மாங்காய் பச்சடி

Need:
  • மாங்காய் - ஒன்று
  • வெல்லம் - 1/2 கப்
  • ஏலக்காய் - 5
  • கடுகு - 3/4 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் - 2
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  • உப்பு - ஒரு தேக்கரண்டி
Process:
பச்சை மிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். மாங்காயை கேரட் துருவல் போல் துருவிக்கொள்ளவும். வெல்லத்தையும், ஏலக்காயையும் பொடிச்செய்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்கவும். அதில் நறுக்கி வைத்த பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பச்சை மிளகாய் வதங்கியதும் அரை கப் தண்ணீர் சேர்க்கவும்.

தண்ணீரில் துருவிய மாங்காய் மற்றும் உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வரை வதக்கவும்.

மாங்காய் வெந்ததும் பொடிசெய்துள்ள வெல்லத்தை சேர்க்கவும். மாங்காயில் வெல்லம் கரையும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.

மாங்காயும், வெல்லமும் ஒன்றாக கலந்தப்பின்னர் ஏலக்காய் பொடி சேர்க்கவும். ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி ஒரு நிமிடம் வரை வைத்திருந்து இறக்கவும்.

சுவையான மாங்காய் பச்சடி தயார்.

மீன் புளி வறுவல்

Need:
  • மீன் - 7 அல்லது 8 துண்டுகள்
  • 65 பொடி - 1 1/2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
  • புளித் தண்ணீர் - 3 தேக்கரண்டி
  • பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
Process:
ஒரு தட்டில் 65 பொடி, மிளகாய் பொடி இரண்டையும் போட்டு கலந்து கொள்ளவும்.

அதனுடன் பூண்டு விழுது சேர்த்து பிசைந்து தேவைக்கேற்ப புளித் தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.

அதில் மீன் துண்டுகளை போட்டு முழுவதும் தடவி விட்டு முக்கால் மணி நேரம் ஊற விடவும்.

தோசை கல்லில் எண்ணெய் விட்டு மீன் துண்டுகளை போட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வறுத்து எடுக்கவும்.

சுவையான மீன் புளி வறுவல் தயார்.

பிட்ஸா தோசை

Need:
  • தோசை மாவு - ஒரு கப்
  • முட்டை - ஒன்று
  • பெரிய வெங்காயம் - ஒன்று
  • தக்காளி - ஒன்று
  • மிளகு, சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
  • கொத்தமல்லி தழை - 2 கொத்து
  • பச்சை மிளகாய் - ஒன்று
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • உப்பு - 2 சிட்டிகை
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி
Process:
பெரிய வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தோசைக்கல்லில் எண்ணெய் தடவி இரண்டு கரண்டி மாவை ஊற்றி சற்று தடிமனாக ஊத்தாப்பம் போல் ஊற்றவும். பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி மேலே மிளகு, சீரகத் தூள், உப்பு, தூவவும்.

அதன் மேல் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி வேக விடவும்.

மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

சுவையான பிட்ஸா தோசை தயார்.

வற்றல் குழம்பு

Need:
  • மல்லி - 2 மேசைக்கரண்டி
  • மிளகாய் வற்றல் - 5
  • சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • கடலை பருப்பு - அரை மேசைக்கரண்டி
  • துவரம் பருப்பு - அரை மேசைக்கரண்டி
  • வெந்தயம் - அரை தேக்கரண்டி
  • மிளகு - ஒரு தேக்கரண்டி
  • புளி - ஒரு எலுமிச்சை அளவு
  • மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
  • சுண்டைக்காய் வற்றல் - ஒரு மேசைக்கரண்டி
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி
  • சின்ன வெங்காயம் - 10
  • உப்பு - ஒன்றரை மேசைக்கரண்டி
Process:
ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்கவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.

வெறும் வாணலியில் முதலில் மல்லி மற்றும் மிளகாய் வற்றல் இரண்டையும் போட்டு 2 நிமிடம் வறுக்கவும்.

பிறகு கடலை பருப்பு, துவரம் பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம் போட்டு 2 நிமிடம் சிவக்க வறுக்கவும். அதன் பின்னர் சிவந்ததும் ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.

ஆறியதும் எடுத்து மிக்ஸியில் போட்டு கால் கப் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் ஊற வைத்த புளியை கரைத்து புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளவும். இதே போல இரண்டு முறை அரை கப் தண்ணீர் ஊற்றி கரைத்து மொத்தம் ஒன்றரை கப் புளி கரைச்சல் எடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

பின்னர் கரைத்து வைத்திருக்கும் புளி கரைச்சலுடன் மஞ்சள் தூள், உப்பு, அரைத்த விழுது சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம், சுண்டைக்காய் வற்றல், வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் சிவக்க வதக்கவும்.

பிறகு கரைத்து வைத்திருக்கும் புளி கரைச்சலை தாளித்தவற்றுடன் ஊற்றவும்.

புளிக்கரைசலை ஊற்றிய பிறகு ஒரு தட்டை வைத்து மூடி கொதிக்க விடவும்.

பின்னர் 8 நிமிடம் கழித்து குழம்பு கொதித்து சற்று கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

சுவையான வற்றல் குழம்பு ரெடி. விருப்பட்டால் இறக்குவதற்கு சற்று முன்பு அரை தேக்கரண்டி வெல்லம் சேர்த்தால் மிகவும் ருசியாக இருக்கும். சுண்டைக்காய் வற்றலுக்கு பதிலாக கத்திரிக்காய் வற்றல், மா வற்றல், கொத்தவரங்காய் வற்றல் இவற்றில் ஏதாவது ஒன்றை சேர்த்து செய்யலாம்.

சோளா பூரி

Need:
  • மைதா மாவு - கால் கிலோ
  • உப்பு - ஒரு தேக்கரண்டி
  • எண்ணெய் - அரை தேக்கரண்டி
 Process:
முதலில் சோளா பூரி செய்ய தேவையானவைகளை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

மைதா மாவுடன் உப்பு, எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.

பிசைந்த மாவை சிறிய எலுமிச்சை அளவு உருண்டையாக உருட்டி எடுத்துக் கொள்ளவும். அதை சப்பாத்தி கட்டையில் வைத்து நன்கு பெரிதாக தேய்த்துக் கொள்ளவும்.

தேய்த்ததும் வட்டமாக வருவதற்கு ஒரு வட்டமான மூடியை மாவில் வைத்து அழுத்தி வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேய்த்து வைத்திருக்கும் பூரியை போட்டு வெள்ளை நிறத்தில் பொரித்து எடுக்கவும்.

சுவையான சோளா பூரி தயார். விரும்பிய குருமா அல்லது சன்னா மசாலாவுடன் பரிமாறவும்.

பலாச்சுளை அல்வா

Need:
  • பலாச்சுளை - 16
  • சீனி - ஒன்றரை கப்
  • நெய் - 4 மேசைக்கரண்டி
Process:
பலாச்சுளையை கொட்டை மற்றும் உள் தோலை நீக்கி விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு அடிகனமான வாணலியில் நறுக்கிய பலாச்சுளையை போட்டு சீனி சேர்த்து அடுப்பில் வைத்து சீனி கரையும் வரை கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும்.

20 நிமிடம் கழித்து நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கி விடவும்.

சுவையான பலாச்சுளை அல்வா ரெடி.

பருப்புகூட்டுச் சாறு

Need:
  • அரைக்க:
  • துவரம் பருப்பு - அரை கப்
  • காய்ந்த மிளகாய் - 4
  • சீரகம் - அரை தேக்கரண்டி
  • சின்ன வெங்காயம் - 5
  • புளி தண்ணீர் - 2 கப்
  • தாளிக்க:
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி
  • கடுகு - அரை தேக்கரண்டி
  • சின்ன வெங்காயம் - 5
  • உப்பு - தேவைக்கேற்ப
Process:
பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும். 2 கப் அளவு புளி தண்ணீர் கரைத்து வைக்கவும். தாளிப்பதற்கு வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

ஊற வைத்த பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். அதனுடன் கடைசியில் வெங்காயம் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதை புளி தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

வாணலியில் அரைத்த விழுதை போட்டு சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து கை விடாமல் களி கிண்டுவதை போல் 3 நிமிடம் கிண்டவும்.

மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பொடியாக வெட்டிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமானதும் கிரேவியில் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

சுவையான பருப்பு கூட்டு சாறு தயார். இதை சாதத்தில் ஊற்றி சாப்பிடலாம்.

பொரித்த சிக்கன்

Need:
  • சிக்கன் - 1/2 கிலோ
  • இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
  • தயிர் - 2 மேசைக்கரண்டி
  • வினிகர் - ஒரு தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
  • மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
  • தந்தூரி மசாலா தூள் - 1 மேசைக்கரண்டி
  • ஓமம் (oregano) - சிறிது (விரும்பினால்)
  • கார்ன் ஃபிளார் - 2 மேசைக்கரண்டி
  • முட்டை - ஒன்று
  • எண்ணெய் - பொரிக்க
  • உப்பு - தேவையான அளவு
Process:
எலும்பில்லாத சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும். அத்துடன் இஞ்சி பூண்டு, தயிர், வினிகர், உப்பு போட்டு பிரட்டி 15 நிமிடம் ஊற விடவும்.

பின்னர் அதில் தந்தூரி மசாலா பவுடர், மசாலா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்க்கவும்.

அதனுடன் கார்ன் ஃபிளார் மற்றும் முட்டை சேர்க்கவும்.

எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகப் பிரட்டி 15 நிமிடங்கள் வரை ஊற விடவும்.

கடைசியாக ஆரிகானோ சேர்க்கவும்.

மிதமான தீயில் பொரித்து பொரித்து எடுக்கவும்.

சுவையான பொரித்த தந்தூரி சிக்கன் தயார்.

ஈஸி உருளை ஃப்ரை

Need:
  • உருளைக்கிழங்கு - அரைக் கிலோ
  • மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
  • மல்லி தூள் - அரை தேக்கரண்டி
  • கரம் மசாலா - அரை தேக்கரண்டி
  • தயிர் - 3 தேக்கரண்டி
  • கடுகு - அரை தேக்கரண்டி
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கேற்ப
Process:
உருளைக்கிழங்கை தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

நறுக்கிய உருளைக்கிழங்கில் ஒரு தேக்கரண்டி எண்ணெய், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து கிளறி மைக்ரோவேவில் ஹையில் 5 நிமிடம் வைக்கவும். 3 நிமிடத்தில் எடுத்து, கிளறி விட்டு மீண்டும் வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, உருளைக்கிழங்கை சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து மூடி போட்டு 2 நிமிடம் வேக விடவும்.

அதில் பொடி வகைகளை சேர்த்து பிரட்டி மேலும் ஒரு நிமிடம் வைத்திருக்கவும்.

கடைசியில் தயிர் சேர்த்து கிளறி, தயிர் ஈரப்பதம் போனதும் இறக்கவும்.

சுவையான ஈஸி உருளை ஃப்ரை ரெடி.

முட்டை மசாலா

Need:
  • முட்டை - 5 வேக வைத்தது
  • வெங்காயம் - 2
  • தக்காளி - 2
  • இஞ்சி - சிறிது
  • பூண்டு - 4 பல்
  • கொத்தமல்லி - சிறிதளவு
  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  • தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
  • கரம்மசாலா - 1/4 தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கேற்ப
  • எண்ணெய்
  • தாளிக்க
  • சோம்பு - அரை தேக்கரண்டி
  • பட்டை - சிறிய துண்டு
  • கிராம்பு - 2
  • ஏலக்காய் - 1
  • பிரிஞ்சி இலை - சிறிதளவு
  • சீரகம் - அரை தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - சிறிதளவு
Process: 

வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளிக்கவும். அத்துடன் நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்கி பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.

வதக்கியவற்றை எடுத்து சற்று ஆறவைத்து, நறுக்கின இஞ்சி பூண்டு சேர்த்து விழுதாக அரைக்கவும்.

மீண்டும் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம், கறிவேப்பிலை தாளித்து, வேக வைத்த முட்டையை கீறி விட்டு சேர்த்து கிளறவும். அத்துடன் அரைத்த விழுதினையும் சேர்த்து கிளறிவிடவும்.

அத்துடன் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

க்ரேவி கெட்டியானதும் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.

சுவையான முட்டை மசாலா தயார்.
 

Monday, 13 February 2017

ப்ரட் ஹல்வா

Need:

  • பிரட் - 10 துண்டுகள

  • வற்றிய பால் - 3 கப்

  • கன்டன்ஸ்டு மில்க் - 4 மேசைக்கரண்டி

  • சீனி - 1 கப்

  • ஏலத்தூள் - சிறிது

  • முந்திரி - சிறிது

  • வெண்ணெய் - 1/2 கப் + 3 மேசைக்கரண்டி
 Process:
ப்ரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு ஒரு பாத்திரத்தில் உதிர்த்து போடவும்.

ஒரு கடாயில் 3 மேசைக்கரண்டி வெண்ணெய் விட்டு முந்திரியை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

அதே கடாயில் பிரட் துண்டங்களைப் போட்டு வறுக்கவும்.

அத்துடன் வற்றிய பால் ஊற்றி குழைய பிரட்டவும்.

அதன் பின்னர் கன்டன்ஸ்டு மில்க் சேர்க்கவும்.

பின்னர் சீனி சேர்த்து பிரட்டி விட்டு கொண்டே இருக்கவும்.

அதில் வெண்ணெய் சேர்த்து கட்டிவிழாதவாறு தொடர்ந்து கிளறவும்.

பாத்திரத்தில் ஒட்டாமல் கெட்டியான பதம் வரும் போது முந்திரி சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

சுவையான ஸ்வீட் ப்ரெட் ஹல்வா ரெடி

ஸ்டஃப்டு மசாலா இட்லி

Need:

  • இட்லி மாவு - ஒரு பெரிய கப் அளவு

  • பட்டாணி - 1/2 கப்

  • உருளை கிழங்கு - 2 (பெரியது)

  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

  • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

  • மல்லி தூள் - 1/2 தேக்கரண்டி

  • கடுகு - 1/2 தேக்கரண்டி

  • சீரகம் - 1/2 தேக்கரண்டி

  • எண்ணெய் - 2 தேக்கரண்டி

  • உப்பு - தேவைக்கேற்ப
Process:
தேவையானப் பொருட்களை எடுத்து கொள்ளவும். பட்டாணியை ஊற வைத்து உப்பு சேர்த்து வேக வைக்கவும். உருளைக் கிழங்கையும் உப்பு சேர்த்து வேக வைக்கவும். இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து மசித்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து விடவும்.

கடுகு, சீரகம் பொரிந்ததும் மசித்து வைத்துள்ள கலவையை சேர்த்துப் பிரட்டி விட்டு, உப்பு சரிபார்த்து தேவைப்பட்டால் சேர்க்கவும்.

அதனுடன் பொடி வகைகளைச் சேர்த்து, சிறிது தண்ணீரும் சேர்த்து பிரட்டி விட்டு கெட்டியானதும் இறக்கவும்.

இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும், இட்லி தட்டில் துணி போட்டு முதலில் அரை கரண்டி மாவை குழியில் ஊற்றவும். 

அடுத்து ஸ்பூனால் மசாலாவை எடுத்து வைத்து மேலே மீண்டும் அரை கரண்டி மாவை ஊற்றவும். இப்படியே இட்லி மாவை ஊற்றி வேக வைக்கவும்.

இட்லி வெந்ததும் எடுக்கவும். சுவையான மசாலா ஸ்டஃப்டு இட்லி தயார். சட்னி, சாம்பாரோடு பரிமாறவும்.


சாக்கோ ஷீரா

Need:

  • ரவை - ஒரு கப்

  • சர்க்கரை - ஒரு கப்

  • சாக்லெட் சிரப் - கால் கப்

  • முந்திரி

  • ஏலக்காய் தூள்

  • நெய் - அரை கப்
Process:
தனியே ஒரு பாத்திரத்தில் சர்க்கரை அளவுடன் மூன்று பங்கு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். வாணலியில் நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதே நெய்யில் ரவையை சேர்த்து சிம்மில் 5 நிமிடம் வரை வறுக்கவும்.

வறுத்த ரவையில் கொதிக்கும் சர்க்கரை தண்ணீரை சேர்க்கவும். ஏலக்காய் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.

வெந்து வரும்போது சாக்லெட் சிரப் பாதி அளவு சேர்க்கவும்.

வாணலியில் ஒட்டாதவாறு அவ்வபோது கிளறிவிடவும்.

எல்லாம் சேர்ந்து கேசரி பதத்திற்கு திரண்டு வந்ததும் முந்திரி தூவி இறக்கவும்.

மீதி சாக்லெட் சிரப்பை மேலே ஊற்றி, பாதாம் தூவி பரிமாறவும். சுவையான சாக்கோ ஷீரா தயார்.

மிளகு காரச் சட்னி

Need:

  • தக்காளி - 5 (பெரியது)

  • காய்ந்த மிளகாய் - 4

  • மிளகு - 1 தேக்கரண்டி

  • வெந்தயம் - 3/4 தேக்கரண்டி

  • பெருங்காயம் - சிறிதளவு

  • நல்லெண்ணெய் - 2 குழிக்கரண்டி

  • கடுகு, உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

  • கறிவேப்பிலை - 2 ஆர்க்கு

  • உப்பு - தேவைக்கேற்ப
Process:
தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்து கொள்ளவும். தக்காளியை பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகாயை சிவக்க வறுத்து எடுக்கவும்.

அடுத்து மிளகை போட்டு வெடித்ததும் உடனே எடுத்துக் விடவும். (மிளகாயை எடுத்ததும் அடுப்பை அணைத்துவிட்டு மிளகை போடவும். இல்லையென்றால் வெடித்து சிதறும்.)

அடுப்பை அணைத்து வைத்து வாணலி சூட்டில் வெந்தயத்தை போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.

மீண்டும் அடுப்பை எரியவிட்டு, வாணலியில் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி, பெருங்காயம் தூவி, தக்காளியை போட்டு உப்பு சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக குழைய வதங்க வேண்டும். வதங்கிய பின்னர் எடுத்து, வறுத்த எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து வெடித்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்து, அரைத்த சட்னியில் கொட்டி கலந்து விடவும்.

சுவையான மிளகு கார சட்னி தயார். இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

அச்சு முறுக்கு

Need:

  • பச்சரிசி - 1 கிலோ

  • சர்க்கரை - 300 கிராம்

  • முட்டை - 3

  • தேங்காய் - 1

  • எண்ணெய்
Process:
முதலில் தேங்காயை துருவி கெட்டியாக‌ பாலெடுத்துக் கொள்ளவும். பச்சரிசியை நனைய‌ வைத்து டவலில் ஈரத்தை போக்கி, நீர் விடாமல் மிக்சியில் நைசாக‌ பொடி செய்யவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கிக் கொள்ளவும்.

அத்துடன் தேங்காய் பால் மற்றும் சர்க்கரை சேர்க்கவும்.

அதில் மாவை சேர்த்து நன்கு கலக்கவும்.

தோசை மாவு பதத்தில், சரியான பக்குவத்தில் இருக்க வேண்டும். கெட்டியாக இருந்தால் முறுக்கு கடினமாக இருக்கும். நீர்க்க இருந்தால் முறுக்கு மொறுமொறுப்பாக வரும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். அதில் முறுக்கு அச்சினை முக்கி சூடாக்கவும். அச்சு சூடாக இருந்தால்தான் மாவு அதில் ஒட்டும்.

சூடான‌ அச்சை மாவில் முக்கால் பாகம் அமிழ்த்தி எடுக்கவும். முழுவதும் அமிழ்த்தினால் முறுக்கு அச்சில் இருந்து கழன்று விழாது. கவனம் தேவை.

மாவுடன் கூடிய அச்சை எண்ணெயில் அமிழ்த்தவும். மாவு சற்று வெந்ததும் முறுக்கானது அச்சில் இருந்து பிரிந்து வந்துவிடும்.

முறுக்கு சிவந்து வந்ததும் எடுக்கவும்.

இதே போல் எல்லா மாவையும் முறுக்காக சுட்டு எடுக்கவும். சட்டியின் அளவைப் பொறுத்து ஒரே நேரத்தில் இரண்டு மூன்று என்று பொரித்து எடுக்கலாம்.

பொட்டெட்டோ சீஸ் பால்ஸ்

Need:

  • உருளைக்கிழங்கு - 3

  • வெங்காயம் - 2

  • கொத்தமல்லி - சிறிதளவு

  • கேரட் - 1/2 கப் (துருவியது)

  • சீஸ் - 1/2 கப் (துருவியது)

  • கார்ன் - தேவைக்கேற்ப

  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

  • கரம் மசாலா - 1 தேக்கரண்டி

  • கார்ன்ஃப்ளார் - தேவைக்கேற்ப

  • எண்ணெய் - பொரிப்பதற்கு

  • உப்பு - தேவைக்கேற்ப

  • ப்ரெட் தூள் - தேவைக்கேற்ப
Process:
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

அதில் நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், சீஸ், கார்ன், கொத்தமல்லி, மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

பிசைந்து வைத்துள்ளதை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

கார்ன் ப்ளாரில் தண்ணீர் ஊற்றி கரைத்து, அதில் கிழங்கு உருண்டைகளை முக்கி எடுத்து, பின்னர் ப்ரெட் தூளில் பிரட்டவும்.

இந்த உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

உருண்டைகள் வெந்து பொன்னிறமானதும் எண்ணெயில் இருந்து எடுக்கவும்.

சுவையான பொட்டேட்டோ சீஸ் பால்ஸ் தயார். டொமெட்டோ சாஸ் உடன் பரிமாறவும்.

வரகரிசி உளுந்தங்கஞ்சி

Need:

  • வரகரிசி‍‍‍‍‍‍ - 100 கிராம்

  • தோலுடன் கூடிய‌ உளுத்தம்பருப்பு - 25 கிராம்

  • வெந்தயம் - கால் ஸ்பூன்

  • சீரகம் - கால் ஸ்பூன்

  • முழுப்பூண்டு - 2

  • தேங்காய் துருவல் - அரை கப்

  • உப்பு - தேவைக்கேற்ப
Process:
தேவையான‌ப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

முதலில் உளுத்தம் பருப்பை கல் நீக்கி, கொதிக்கும் நீரில் போடவும்.

சற்று நேரம் ஆகி பாதி வெந்ததும் வரகரிசியை கல் நீக்கி சேர்க்கவும்.

அத்துடன் உரித்த பூண்டு, சீரகம், வெந்தயம் சேர்க்கவும்.

பின்னர் தேங்காய் துருவல் சேர்க்கவும்.

நன்கு வெந்ததும் உப்பு சேர்த்து இறக்கவும்.

கஞ்சியாக‌ வைத்து எள்ளுத்துவையல் வைத்து சாப்பிடலாம். அல்லது சாதம் போல‌ வைத்து மீன் குழம்பு சேர்த்து சாப்பிடலாம்.

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

Need:
  • கத்தரிக்காய் -1/4 கிலோ
  • சின்ன வெங்காயம் - 15
  • தக்காளி - 2
  • தேங்காய் - அரை மூடி (சிறியது)
  • பூண்டு - 10 பல்
  • கடுகு - 1/2 தேக்கரண்டி
  • வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
  • புளிக்குழம்பு பொடி - 4 தேக்கரண்டி
  • புளி தண்ணீர் - 2 கப்
  • நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
  • கருவேப்பிலை - 1 ஆர்க்கு
  • உப்பு - தேவைக்கேற்ப
Process:
தேவையானப் பொருட்களை தயாராக வைத்து கொள்ளவும். பூண்டை தட்டி வைத்து கொள்ளவும். வெங்காயத்தில் பாதியை மட்டும் இரண்டாக வெட்டி கொள்ளவும். கத்தரிக்காய்களை மேலாக ஒரு கீறல் மற்றும் கீழ் பகுதியில் ஒரு கீறலாக கீறி கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி வெட்டாத வெங்காயம் மற்றும் தக்காளியை வதக்கி கொள்ளவும். வதக்கியதை ஆறவிட்டு தேங்காயுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

கத்தரிக்காயில் லேசாக எண்ணெய் விட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து மைக்ரோவேவில் 4 நிமிடம் வைத்து எடுத்து கொள்ளவும். (பாத்திரத்தில் கூட வதக்கி கொள்ளவும்).

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் தாளிக்கவும். அடுத்து வெட்டி வைத்த வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

வதங்கியதும் தட்டி வைத்த பூண்டை போட்டு வதக்கவும்.

அடுத்து அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கிளறி விடவும். இதனுடன் குழம்பு பொடி சேர்த்து கிளறவும்.

அடுத்து புளி கரைசல் சேர்த்து, மேலும் சிறிது தண்ணீரும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும்.

குழம்பு கொதித்ததும் கத்தரிக்காய்களை சேர்த்து கொதிக்க விடவும்.

எண்ணெய் மேலாக தெளிந்து வந்ததும் இறக்கவும்.

சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தயார்.

பீட்ரூட் கோதுமை அல்வா

Need:
  • கோதுமை மாவு - 1 கப்
  • ஜீனி - 2 1/2 கப்
  • நெய் - 3/4 கப்
  • முந்திரி பருப்பு - 12
  • கலருக்கு :
  • பீட்ரூட் - 1 (சிறியது)
  • கேரட் - 1 (சிறியது)
Process:
தேவையானப் பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும். கேரட், பீட்ரூட்டை தோல் சீவி வெட்டி மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்த்து 1 கப் சாறு எடுத்து கொள்ளவும்.

ஜீனி மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

ஜீனி கரைந்ததும் பீட்ரூட் சாறை சேர்க்கவும்.

மாவை தோசை மாவு போல் நீர்க்க கரைத்து கொள்ளவும்.

தண்ணீர் கொதித்ததும் கரைத்த மாவை சேர்க்கவும்.

கட்டி பட்டு விடாமல் இருக்க கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.

அடுத்து சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும்.

அல்வா நன்றாக கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் நெய் வெளியே வரும்.

இப்பொழுது இன்னொரு அடுப்பில் நெய்யில் முந்திரியை வறுக்கவும்.

வறுத்த முந்திரியை அல்வாவுடன் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

சுவையான கோதுமை பீட்ரூட் அல்வா ரெடி.

பருப்புக்கீரை கடையல்

Need:
  • பருப்புக் கீரை - 1 கட்டு
  • பாசிப்பருப்பு - 1/4 கப்
  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • சின்ன வெங்காயம் - 10
  • பூண்டு - 4 பல்
  • தக்காளி - 1 (பெரியது)
  • மிளகாய் வற்றல் - 4
  • கடுகு - 1/2 தேக்கரண்டி
  • சீரகம் - 1 தேக்கரண்டி
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கேற்ப
Process:
தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும். கீரையை (கூட்டு செய்யக் கூடிய ஏதாவது ஒரு கீரை) சுத்தம் செய்து கொள்ளவும். பாதி தக்காளியை பொடியாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக வெட்டவும்.

குக்கரில் பருப்பை வேக வைத்து கொள்ளவும். அடுத்து கீரை, பாதி தக்காளி, பாதி வெங்காயம், பூண்டு, அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து 1/4 டம்ளர் தண்ணீர் விட்டு 2 விசில் விட்டு எடுத்து ஆறியதும், மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம், காய்ந்த மிளகாய் தாளிக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து பிரட்டி விடவும்.

மிளகாய் தூள் வாசம் மாறியதும், பருப்பையும், கீரையையும் சேர்க்கவும்.

சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.

சுவையான பருப்புக் கீரை கடையல் தயார். சாதத்தில் பிசைந்தும், பக்க உணவாகவும் சாப்பிடலாம்.