Friday, 17 February 2017

சின்ன உருளைக்கிழங்கு டிலைட்

Need:
  • சின்ன உருளைக்கிழங்கு - 10
  • எண்ணெய் - 4 தேக்கரண்டி
  • சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • பச்சை மிளகாய், இஞ்சி அரைத்த விழுது - அரை தேக்கரண்டி
  • புதினா இலைகள் - ஒரு கைப்பிடி
  • தயிர் - 6 மேசைக்கரண்டி
  • சின்ன வெங்காயம் - 10
  • மிளகாய்தூள் - அரை தேக்கரண்டி
  • பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
Process:
தேவையானப் பொருள்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

சின்ன உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை தனித்தனியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பாதி சீரகத்தை போட்டு வெடித்ததும் வேக வைத்துத் தோல் உரித்த உருளைக்கிழங்கை சேர்த்து பிரட்டி விடவும்.

அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி விழுது, நறுக்கி வைத்த புதினா இலைகள் சேர்த்து வதக்கவும்.

அதில் 3 தேக்கரண்டி தயிர் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

உருளைக்கிழங்கு நன்கு சேர்ந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து 3 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் மீதி சீரகம் போட்டு வெடித்ததும் சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.

அதனுடன் மிளகாய்த் தூள், பூண்டு விழுது, மீதியுள்ள தயிர், சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.

எல்லாம் சேர்ந்து நன்கு மசாலாப் போல் வந்ததும் அதில் உருளைக்கிழங்கு கலவையைப்போட்டு அடுப்பை சிம்மில் வைத்து வதக்கவும்.

உருளைக்கிழங்குடன் மசாலா சேர்ந்து பிரட்டினாற்போல் வந்ததும் இறக்கி வைத்து கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

சுவையான சின்ன உருளைக்கிழங்கு டிலைட் ரெடி.

மட்டன் ட்ரை ஃப்ரை

Need:
  • மட்டன் - 350 கிராம்
  • வெங்காயம் - 2
  • இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  • மிளகாய்தூள் - 1 1/2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • தயிர் - 100 மில்லி
  • சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • சோம்பு - ஒரு தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2
Process:
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசாலா பொருட்கள் மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்கவும். அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

அதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் மட்டன் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

மட்டன் வதங்கியதும் தயிர் மற்றும் சீரகம் சேர்த்து பிரட்டி விடவும்.

மட்டன் வேக அதில் இருக்கும் தண்ணீரே போதுமானது, தேவையெனில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி சிம்மில் வைத்து வேக விடவும்.

மட்டன் வெந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

சுவையான மட்டன் ட்ரை ஃப்ரை தயார்.

பச்சைமிளகாய் சாம்பார்

Need:
  • துவரம் பருப்பு - கால் கப்

  • மிளகாய் வற்றல் - 3

  • கடுகு - அரை தேக்கரண்டி

  • புளிக்கரைச்சல் - 3 மேசைக்கரண்டி

  • பச்சை மிளகாய் - 8

  • கறிவேப்பிலை - ஒரு கொத்து

  • தேங்காய் துருவல் - கால் கப்

  • வெண்டைக்காய் - 7

  • கத்திரிக்காய் - 1

  • மாங்காய் - பாதி

  • பெருங்காயத் தூள் - அரை தேக்கரண்டி

  • கொத்தமல்லி - 2 கொத்து

  • வெங்காயம் - 3

  • தக்காளி - 2

  • உப்பு - 2 தேக்கரண்டி

  • எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
Process:
வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெண்டைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மாங்காயை துண்டுகளாக நறுக்கவும். கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தேங்காய், பச்சை மிளகாய் இரண்டையும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

குக்கரில் பருப்பு, வெங்காயம், தக்காளி, போட்டு தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி வெண்டைக்காயை வதக்கி வைத்துக் கொள்ளவும்.

வேக வைத்த பருப்புடன் வதக்கிய வெண்டைக்காய், மாங்காய், கத்திரிக்காய், போட்டு புளிக்கரைச்சல் ஊற்றி, உப்பு போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.

கொதித்ததும் அரைத்த விழுதை போட்டு கிளறி விட்டு 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் போட்டு தாளிக்கவும்.

தாளித்தவற்றை சாம்பாருடன் சேர்த்து சேர்த்து கலக்கி விட்டு இறக்கவும்.

சுவையான பச்சைமிளகாய் சாம்பார் தயார்.

கோபி மஞ்சூரியன்

Need:
  • காலிப்ளவர் சிறியது - ஒன்று
  • மைதா மாவு - ஒரு மேசைக்கரண்டி
  • கார்ன்ப்ளார் - அரை மேசைக்கரண்டி
  • தனி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
  • உப்பு - ஒரு சிட்டிகை + ஒரு தேக்கரண்டி
  • குடை மிளகாய் - ஒன்று
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
  • தக்காளி சாஸ் - 3 மேசைக்கரண்டி
  • வெங்காயம் - 2
  • மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
  • பூண்டு - 8 பல்
 Process:
பூண்டை சிறுசிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காலிஃப்ளவரை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு தட்டில் காலிஃப்ளவர் துண்டுகளை போட்டு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சுடு தண்ணீரை ஊற்றி 5 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் எடுத்து தண்ணீரை வடிகட்டி விட்டு அதனுடன் மைதாமாவு, கார்ன்ஃப்ளார், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு பிசைந்துக் கொள்ளவும். அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசறி 10 நிமிடம் ஊற வைக்கவும்.

வாணலியில் 1 1/2 கப் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ஊற வைத்த காலிஃப்ளவர் துண்டுகளை போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு போட்டு நிறம் மாறும் வரை வதக்கவும்.

நிறம் மாறியதும் அதில் வெங்காயம், குடைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு வதக்கி விட்டு அதில் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டிவிட்டு வதக்கவும்.

இஞ்சி பூண்டு வாசனை அடங்கி, குடைமிளகாய் மற்றும் வெங்காயம் வதங்கியதும் தக்காளிசாஸ் ஊற்றி சாம்பார் மிளகாய் தூள் போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி கிளறி விடவும்.

5 நிமிடம் கழித்து பொரித்து வைத்திருக்கும் காலிஃப்ளவரை போட்டு நன்கு கிளறி விடவும்.

பிறகு 3 அல்லது 5 நிமிடம் கழித்து இறக்கி வைத்து விடவும்.

சுவையான கோபி மஞ்சூரியன் தயார். பரிமாறும் பொழுது மேலே கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

கொத்தமல்லி பொடி

Need:
  • தனியா - 100 கிராம்
  • துவரம் பருப்பு - 50 கிராம்
  • புளி - கொட்டை பாக்கு அளவு
  • உப்பு - அரை தேக்கரண்டி
  • மிளகாய் வற்றல் - 8
  • பெருங்காயத் துண்டு - சுண்டைக்காய் அளவு
Process:
தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பெருங்காயம் போட்டு பொரித்து, துவரம் பருப்பு போட்டு 2 நிமிடம் வறுக்கவும்.

அதன் பிறகு மிளகாய் வற்றல் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி தனியா போட்டு 3 நிமிடம் வாசனை வரும் வரை வறுக்கவும்.

ஆறியதும் மிக்ஸியில் முதலில் துவரம் பருப்பு, மிளகாய் வற்றல், உப்பு போட்டு பொடி செய்யவும்.

அதனுடன் வறுத்து வைத்துள்ள தனியா மற்றும் புளி சேர்த்து பொடி செய்யவும்.

சாதத்துடன் நெய் சேர்த்து இந்த பொடியை கலந்து சாப்பிடலாம், சுவையாக இருக்கும்.