Friday, 17 February 2017

கோபி மஞ்சூரியன்

Need:
  • காலிப்ளவர் சிறியது - ஒன்று
  • மைதா மாவு - ஒரு மேசைக்கரண்டி
  • கார்ன்ப்ளார் - அரை மேசைக்கரண்டி
  • தனி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
  • உப்பு - ஒரு சிட்டிகை + ஒரு தேக்கரண்டி
  • குடை மிளகாய் - ஒன்று
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
  • தக்காளி சாஸ் - 3 மேசைக்கரண்டி
  • வெங்காயம் - 2
  • மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
  • பூண்டு - 8 பல்
 Process:
பூண்டை சிறுசிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காலிஃப்ளவரை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு தட்டில் காலிஃப்ளவர் துண்டுகளை போட்டு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சுடு தண்ணீரை ஊற்றி 5 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் எடுத்து தண்ணீரை வடிகட்டி விட்டு அதனுடன் மைதாமாவு, கார்ன்ஃப்ளார், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு பிசைந்துக் கொள்ளவும். அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசறி 10 நிமிடம் ஊற வைக்கவும்.

வாணலியில் 1 1/2 கப் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ஊற வைத்த காலிஃப்ளவர் துண்டுகளை போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு போட்டு நிறம் மாறும் வரை வதக்கவும்.

நிறம் மாறியதும் அதில் வெங்காயம், குடைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு வதக்கி விட்டு அதில் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டிவிட்டு வதக்கவும்.

இஞ்சி பூண்டு வாசனை அடங்கி, குடைமிளகாய் மற்றும் வெங்காயம் வதங்கியதும் தக்காளிசாஸ் ஊற்றி சாம்பார் மிளகாய் தூள் போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி கிளறி விடவும்.

5 நிமிடம் கழித்து பொரித்து வைத்திருக்கும் காலிஃப்ளவரை போட்டு நன்கு கிளறி விடவும்.

பிறகு 3 அல்லது 5 நிமிடம் கழித்து இறக்கி வைத்து விடவும்.

சுவையான கோபி மஞ்சூரியன் தயார். பரிமாறும் பொழுது மேலே கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

கொத்தமல்லி பொடி

Need:
  • தனியா - 100 கிராம்
  • துவரம் பருப்பு - 50 கிராம்
  • புளி - கொட்டை பாக்கு அளவு
  • உப்பு - அரை தேக்கரண்டி
  • மிளகாய் வற்றல் - 8
  • பெருங்காயத் துண்டு - சுண்டைக்காய் அளவு
Process:
தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பெருங்காயம் போட்டு பொரித்து, துவரம் பருப்பு போட்டு 2 நிமிடம் வறுக்கவும்.

அதன் பிறகு மிளகாய் வற்றல் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி தனியா போட்டு 3 நிமிடம் வாசனை வரும் வரை வறுக்கவும்.

ஆறியதும் மிக்ஸியில் முதலில் துவரம் பருப்பு, மிளகாய் வற்றல், உப்பு போட்டு பொடி செய்யவும்.

அதனுடன் வறுத்து வைத்துள்ள தனியா மற்றும் புளி சேர்த்து பொடி செய்யவும்.

சாதத்துடன் நெய் சேர்த்து இந்த பொடியை கலந்து சாப்பிடலாம், சுவையாக இருக்கும்.

தேங்காய் துவையல்

Need:
  • கருப்பு உளுத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
  • தேங்காய் - ஒரு மூடி
  • மிளகாய் வற்றல் - 5
  • புளி - கொட்டை பாக்கு அளவு
  • உப்பு - அரை தேக்கரண்டி
  • எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
  • பெருங்காயத் துண்டு - சுண்டைக்காய் அளவு
 Process:
தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயத் துண்டை போட்டு பொரித்து எடுக்கவும். அதில் மிளகாய் வற்றல் போட்டு வறுத்து எடுக்கவும்.

உளுத்தம் பருப்பை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் புளி, மிளகாய் வற்றல், உப்பு, வறுத்த பெருங்காயத் துண்டு, தேங்காய் துருவல் போட்டு 3 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.

கடைசியில் உளுத்தம் பருப்பை வைத்து ஒரு முறை அரைத்து விட்டு எடுத்து விடவும்.

சுவையான தேங்காய் துவையல் ரெடி. இந்த துவையலை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

ஜவ்வரிசி உப்புமா

Need:
  • நைலான் ஜவ்வரிசி - ஒரு கப்
  • பயத்தம் பருப்பு - கால் கப்
  • மிளகாய் வற்றல் - 4
  • கடுகு - ஒரு தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
  • கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
  • தேங்காய் துருவல் - கால் கப்
  • கல் உப்பு - ஒரு தேக்கரண்டி
  • பெருங்காயம் - ஒரு சிறு குண்டு மணி அளவு
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
 Process:
தேங்காயை துருவிக் கொள்ளவும். மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி வைத்துக் கொள்ளவும். கறிவேப்பிலையை தண்ணீரில் அலசிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசி போட்டு தண்ணீர் ஊற்றி 3 மணிநேரம் ஊற வைக்கவும். ஜவ்வரிசி ஊறியதும் தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்

மற்றொரு பாத்திரத்தில் பயத்தம் பருப்பை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் பயத்தம் பருப்பை களைந்து தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்.

அடிகனமான வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயத் துண்டை போட்டு பொரிக்கவும். நன்கு சிவந்து பொரிந்ததும் எடுத்து பொடி செய்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் கடலைப்பருப்பு மற்றும் மிளகாய் வற்றல் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். சற்று சிவக்க வறுக்கவும்.

பிறகு கறிவேப்பிலை, தண்ணீர் வடித்து வைத்திருக்கும் ஜவ்வரிசியை போடவும். பருப்பையும் ஜவ்வரிசியுடன் சேர்க்கவும்.

பிறகு பொடித்து வைத்திருக்கும் பெருங்காயத் தூளை போட்டு ஜவ்வரிசி மற்றும் பயத்தம் பருப்பு ஒன்றாக சேரும்படி நன்கு கிளறவும்.

பின்னர் மூடி வைத்து விட்டு இடையில் திறந்து கிளறி கொண்டே இருக்கவும்.

5 நிமிடம் கழித்து மூடியை திறந்து ஒரு முறை கிளறி விட்டு தேங்காய் துருவலை போட்டு கிளறவும். அடிபிடித்து விடாமல் கிளறி கொண்டே இருக்கவும்.

அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு வேக வைக்கவும். இடையில் கிளறி கொண்டே இருக்கவும். உப்புமா பொலபொலவென்று வந்ததும் அடுப்பில் இருந்து எடுத்து விடவும்.

சூடான ஜவ்வரிசி உப்புமா தயார். இந்த உப்புமாவில் பெரிய ஜவ்வரிசி வைத்து செய்தால் நன்றாக இருக்காது. நைலான் ஜவ்வரிசி வைத்து செய்தால் ருசியாக இருக்கும்.

சாக்லேட் & நட்ஸ் சாண்ட்விச்

Need:
  • ப்ரெட்
  • நியூட்டெல்லா
  • வெண்ணெய்
  • பாதாம், முந்திரி, பிஸ்தா (பொடியாக நறுக்கியது)
 Process:
ப்ரெட் துண்டில் ஒரு பக்கம் மட்டும் வெண்ணெய் தடவி வைக்கவும்.

மற்றொரு பக்கத்தில் நியூட்டெல்லாவை தடவவும்.

அதன் மேல் பொடியாக நறுக்கிய நட்ஸ் தூவவும்.

மற்றொரு ப்ரெட் துண்டில் ஒரு பக்கம் வெண்ணெய் தடவி சாக்லேட் தடவி வைத்துள்ள ப்ரெட்டில் மூடி டோஸ்டரில் வைக்கவும்.

ப்ரெட் டோஸ்டாகி சிவந்ததும் எடுக்கவும்.

சாக்லேட் & நட்ஸ் சாண்ட்விச் தயார்.